திருக்குறள் புதைபொருள்-1
கி. ஆ. பெ. விசுவநாதம்
தி ரு க் கு ற ள்
புதைபொருள்
[முதற் பாகம்]
முத்தமிழ்க் காவலர், கலைமாமணி
டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம், டி. லிட்.
பாரி நிலையம்
184.பிராட்வே.சென்னை.600108
முதற் பதிப்பு : ஜூலை, 1956
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி, 1957
மூன்றாம் பதிப்பு : நவம்பர், 1958
நான்காம் பதிப்பு : ஏப்ரல், 1960
ஐந்தாம் பதிப்பு : செப்டம்பர், 1962
ஆறாம் பதிப்பு : ஜூன், 1966
ஏழாம் பதிப்பு : ஆகஸ்ட், 1970
எட்டாம் பதிப்பு : ஆகஸ்ட், 1974
ஒன்பதாம் பதிப்பு : ஜனவரி, 1979
பத்தாம் பதிப்பு : டிசம்பர், 1982
பதினொன்றாம் பதிப்பு : 1990
விலை: ரூ. 4-50
* * *
அச்சிட்டோர் : தொ.பே. 477820
சாலை அச்சகம், 11 திருவீதியான் தெரு
கோபாலபுரம், சென்னை-600 086 [சாலை 187]
முன்னுரை
திருக்குறள் தமிழகத்தின் செல்வம்! அதுவும் தமிழனின் சொந்தச் சொத்து! அது உலகின் ஒப்பற்ற செல்வங்களில் ஒன்றாக இன்றும் திகழ்ந்து வருகிறது!
முத்துக் குளிக்கும் மக்கள் தங்கள் மூச்சு வலிமைக்கு ஏற்ற அளவு கடலில் மூழ்கி, செல்வங்களை அள்ளி வருவது போல, குறளில் மூழ்கும் மக்களும், தங்கள் அறிவு வலிமைக்கு ஏற்ற அளவு செல்வங்களை அள்ளி மகிழலாம்.
உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்ற நூல்களில் திருக்குறள் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. முதல் இரண்டும் பைபிளும், குரானும் ஆகும். அவை "சமய நூல்கள்" என்று ஒதுக்கப்பட்டு விடுமானால், உலக இலக்கியங்களிலேயே திருக்குறள் ஒன்றிற்கே முதல் இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையடையலாம்.
திருக்குறள் ஒரு வாழ்வு நூல்; அதுவும் வாழ்ந்து காட்டிய ஓர் பேரறிஞனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கபெற்ற ஒரு பெருநூல். வாழ்வு அனைத்தும் வாழ்வாகாது. வாழ்வில் உயிர் பெறுவதே வாழ்வு. குறள் அத்தகைய வாழ்விற்கு வழிகாட்டும் ஒரு வழிகாட்டி!
மனிதன் மனிதனாகப் பிறந்தும், பறவையைப் போல ஆகாயத்தில் பறக்கவும், மீனைப் போலத் தண்ணீரில் நீந்தவும் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால், மனிதன் மனிதனாகப் பிறந்தும், மனிதனைப்போவத் தரையில் எவ்வாறு நடப்பது என்பதைக் கற்றுக்கொள்ளவில்லை. அதைக் கற்றுக்கொடுப்பது திருக்குறள்.
குறளுக்கு உள்ள சிறப்புக்கள் பல. அவற்றுள் ஒன்று அதன் ஒப்பற்ற இயல்பு. அது சிறியவர்களைக் கண்டால் நெருங்கியிருந்துகொண்டு கருத்துக்களை வெளிப்படையாகவே அள்ளி அள்ளி ஊட்டுவதும், அறிஞர்களைக் கண்டு விட்டால் எட்டியிருந்து உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு சிறந்த விருந்தளித்து வருவதுமாகும்.
இந் நூலில் 12 குறள்கள் ஆராயப் பெற்றுள்ளன. முதல் எட்டுக் குறள்களில் புதைபொருள்களும், பின் நான்கு குறள்களில் மறைபொருள்களும் விளக்கப் பெற்றுள்ளன. மாறுபட்ட பொருள்கள் தமிழகப் பேரறிஞர்களால் ஏற்கப் பெறுமானால் மகிழ்வேன். தவறுகள் இருந்து திருத்தப்பெறுமானால் ஏற்பேன்.
திருக்குறளை மேற்போக்காகப் படிப்பதைவிடச் சிறிது கருத்துான்றிப் படிப்பது நல்லது. அதுவும் அறிவதற்காக, போதிப்பதற்காக, எழுதுவதற்காக, பேசுவதற்காக என்று இல்லாமல் "நடந்து ஒழுகுவதற்காக" என்று படிப்பது நல்லது!
என்னால் இயன்ற அளவு செய்யும் இலக்கியத் தொண்டுகளில் ஒன்று இது. தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். இதை எழுதும்படி இடைவிடாது தூண்டிய அன்பர்களுக்கு என் வணக்கம். இதனை நல்ல முறையில் வெளியிட்டு உதவிய பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி. மதிப்புரை வழங்கிய பெரும் பேராசிரியருக்கு எனது நன்றியும், வணக்கமும்!
திருச்சிராப்பள்ளி,
தங்கள் அன்பிற்குரிய,
1—7—1956
கி.ஆ.பெ. விசுவநாதம்
மதிப்புரை
டாக்டர் திரு. அ. சிதம்பரநாத செட்டியார்
அவர்கள், எம். ஏ., பி எச். டி.
தமிழ்ப் பெரும் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்
திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்தவர். அதன் நுண்பொருள்களை ஆய்ந்து பிறர்க்கு எடுத்து வழங்கும் நாநலம் படைத்தவர். "எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு" என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் அறிவு நிரம்பியவர்.
அவரால் இயற்றப்பட்ட இந்நூல், புலவர்க்கும் பொது மக்கட்கும் இனியதோர் விருந்தாகும். திருக்குறட்பாக்களில் வரும் சொற்களை அலசியலசி ஆராய்ச்சி செய்து, கடைந்தெடுத்த நுண்பொருள்களை இனிய, எளிய, செந்தமிழ் நடையில் இந்நூலினுள் அவர் தந்திருப்பதை வரவேற்கின்றேன். "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள்" என்றதன் உண்மையானது, இச் சிறிய பெருநூலால் நன்கு விளங்குகிறது.
'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்ற இடத்தில் வரும் "உயிரினும்" என்ற சொல்லுக்கும், 'பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு' என்ற இடத்து வரும் "பிறர்" என்ற சொல்லுக்கும், 'உடுக்கை யிழந்தவன் கைபோல' என்ற இடத்து வரும் "இழந்தவன்" என்ற சொல்லுக்கும் திரு. விசுவநாதம் தந்திருக்கும் விளக்கங்கள் பாராட்டத் தக்கவை.
பதசாரம் எழுதுதலில் பரிமேலழகர் அழகர் என்பார்கள். ஆயினும் இந்நூலில் காட்டப்படும் புதை பொருள் விளக்கத்தை உற்று நோக்குவோர்க்கு இவ்வாசிரியர் பரிமேலழகரை விஞ்சிவிட்டார் என்பது புலப்படும்.
திருக்குறட் சுரங்கத்துட் புகுந்து, பன்னிரண்டு பாளங்களை எடுத்துவந்து, அவற்றின் சிந்தைக்கினிய அழகினைச் செவ்விதின் எடுத்துக் காட்டியுள்ள திரு. விசுவநாதனாருக்குத் தமிழுலகு கடப்பாடுடையது. அவர் மென்மேலும் இவைபோன்ற நுண்பொருள்களைத் தோண்டி எடுத்துத் தருதல் வேண்டுமென விழைகின்றேன். பலரும் இதைப் படித்துப் பயன்பெறுவது நல்லது.
அண்ணாமலை நகர்
தங்கள்,
18--6-1956
அ. சிதம்பரநாதன்
தமிழுக்குத் தொண்டு செய்வதில்
பொன், பொருள், புகழ், பதவி
ஆகிய நான்கையும் கருதாது
நற்பணி புரிந்து,
ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்,
எனது ஆசிரியர்,
நாவலர்
திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா
அவர்களின் திருவடிகளில்
இந்நூல் ஒரு அன்பு மலராக வைக்கப் பெறுகிறது.
உள்ளுறை
1. உயிரினும்...!
2. கொல்லும் சொல்
3. கோலொடு நின்றான்!
4. சேர்ந்தாரைக் கொல்லி
5. நிலமென்னும் நல்லாள்
6. வேட்டலின்
7. குடம்பை
8. அகர முதல எழுத்தெல்லாம்
9. அப் பற்றைப் பற்றுக!
10. உடுக்கை இழந்தவன்!
11. தினற் பொருட்டாற் கொல்லாது
12. செயற்கரிய செய்வார் பெரியர்!
திருக்குறள் புதைபொருள்
* * *
1. உயிரினும்...!
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
என்பது திருக்குறளில் ஒரு குறள்.
'விழுப்பம்’ என்பது சிறப்பு என்று பொருள்படும். அது முறையே குணம், நலம், புகழ், பெருமை, உயர்வு என்றாகும். இத்தகைய நலன்கள் அனைத்தையும் கொண்ட சிறப்பை 'ஒழுக்கம் தரும்' என்பது வள்ளுவர் கருத்து.
நல்லொழுக்கம், தீயொழுக்கம் என ஒழுக்கம் இரு வகைப்படும். எனினும் "ஒழுக்கம்" என்றால், அது தீயொழுக்கத்தைக் குறிக்காமல் நல்லொழுக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கும் என்பதை இக்குறள் நமக்கு அறிவிக்கிறது.
ஆடை அணிகள், மாட மாளிகைகள், ஆடு மாடுகள், அலங்கார வகைகள், பொன் பொருள்கள், நீர் நிலங்கள், வண்டி வாகனங்கள் முதலியவற்றுள் எதுவும் விழுப்பம் தராது என்பதை இக் குறள் வெளிப்படையாகக் கூறுகிறது.
மேடைமீது ஏறி ஆவேசமாய்ப் பேசுகிற பேச்சு. அருமையாக எழுதுகின்ற எழுத்து, அள்ளிக்கொடுக்கின்ற கொடை, அதிகாரம் வகிக்கின்ற பதவி ஆகியவைகளால் பெறமுடியாத சிறப்பை, ஒருவன் ஒழுக்கம் ஒன்றினால் பெறலாம் என்பதை "ஒழுக்கம் விழுப்பம் தரும்" என்ற சொற்கள் நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கின்றன.
மக்களாய்ப் பிறந்து, மக்களாய் வாழ்ந்து, மக்களாகவே மடிய விரும்பும் எவரும், ஒழுக்கத்தைப்போற்றி வளர்த்துக் காப்பாற்றக் கடமைப்பட்டவர் என்பதை "ஓம்பப்படும்" என்ற சொற்களால் வள்ளுவர் வற்புறுத்திக் கூறியிருக்கிறார்.
கடமை! ஒழுக்கத்தைக் காப்பாற்ற வேண்டியது கடமைதான் என்றாலும், நிழல் தரும் என்றே மரம் வளர்க்கப்படுவதையும், பலன் தரும் என்றே பயிர் வளர்க்கப்படுவதையும், பால் தரும் என்றே பசு வளர்க்கப் படுவதையும் கண்ட வள்ளுவர், 'அப்படிப்பட்ட மக்களிடத்தில் எதுவும் தராத கடமையைச் சொல்லி என்ன பயன்?' என்ற புண்பட்ட மனத்துடன் ஆராய்ந்து, பிறகே "விழுப்பம் தரும் ஓம்பு" என்று பலனையும் சுட்டிக் கூறியிருப்பதாகத் தெரியவருகிறது.
இக் குறளில் இவ்வளவு கூறியும் அவர் மனம் அமைதியடையவில்லை. இதற்குள் ஓர் உவமையும் கூறவேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். பொன்னை, பொருளை, மனைவியை, ம க் க ளை க் காப்பாற்றுவதைப்போல ஒழுக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் எனக் கூற எண்ணியும், இவற்றுள் எதை இழந்தாலும் திரும்பப் பெறமுடியுமே, ஒழுக்கத்தை இழந்து விட்டால் திரும்பப் பெற முடியாதே என நினைத்து, இவற்றுள் எதையும் உவமையாகக் கூறவில்லை என்று தெரிகிறது.
இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை இரண்டு. ஒன்று ஒழுக்கம்; மற்றொன்று உயிர். ஆதலால், போனால் திரும்பி வராத ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர், போனால் திரும்பி வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறியிருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடியதாகும்.
இந்த உவமையிலுங்கூட, ‘உயிரைப் பாதுகாப்பது போல ஒழுக்கத்தைப் பாதுகாக்கவேண்டும்’ என்றா கூறி இருக்கிறார்? அதுதான் இல்லை. ‘உயிரைக் காப்பாற்றுவதை விட அதிகமாக ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும்’ எனக் கூறிவிட்டார். இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல் நமக்கு நன்கு விளக்கிக்கொண்டிருக்கிறது.
‘இருபது நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எந்த விஞ்ஞானியாவது ஒருவன் தோன்றி, இழந்த உயிரைத் திரும்பக் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். ஆனால் எத்தனை நூற்றாண்டுகளானாலும், இழந்து போன மானத்தைத் திரும்பக்கொண்டு வர எந்த விஞ்ஞானியினாலும் இயலாது என்ற விஞ்ஞான ஆராய்ச்சி உண்மையைக்கூட, வள்ளுவர் பெருமான் இந்த ’உயிரினும்' என்ற சொல்லால் அறிவித் திருக்கிறார் என்பதைக் கண்டு மகிழுங்கள்.
“உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை” என்ற பலருடைய கருத்தைத் திருவள்ளுவர் மறுக்கிறார். “ஒன்று இருக்கிறது; அது ஒழுக்கம்தான்” என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். இப்போராட்டத்தை, இக்குறளில் உள்ள “உயிரினும்” என்ற ஒரு சொல் நமக்குப் போராடிக் காட்டுகிறது.
உயிரையுடைய எவரும் உயர்ந்தவராகக் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஆதலின் உயிரைக் காப்பதைவிட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு என்பதை ‘உயிரினும்’ என்ற சொல் அறிவிக்கிறது.
மானத்தை இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலையிலும் ‘மானத்தை இழ வாதே! உயிரை இழந்துவிடு!’ என்ற உயர்ந்த நெறியை வள்ளுவர் நமக்கு ‘உயிரினும்’ என்ற ஒரு சொல்லால் உணர்த்திக் காட்டுகிறார்.
உயிரை இழந்து ஒழுக்கத்தைக் காப்பாற்றிக்கொண்டவன் உள்ளபடியே இறந்தவனாயினும் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உயிர் வாழ்வான். ஒழுக்கத்தை இழந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டவன் உள்ளபடியே உயிரோடு இருப்பினும் கல்ல பிணமாய் நடந்து திரிவான். ஆதலின் காப்பாற்ற வேண்டிய முதல் நிலையில் நிற்பது உயிரல்ல; ஒழுக்கம் என்ற உண்மையை 'உயிரினும்' என்பது உய்த்துண்ரச் செய்கிறது.
ஒருவன் உயிரை இழந்துவிட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை அவனுக்கு ஏற்படுவதில்லை; அந்நிலை பிறருக்கே ஏற்படும். ஆனால், ஒழுக்கத்தை இழந்து விட்டால், அதற்காக அழுது வருந்தும் துன்பநிலை பிறருக்கு ஏற்படுவதில்லை; அந்நிலை அவனுக்கே ஏற்படும்! என்ற இச் சிறந்த கருத்தை வள்ளுவர் 'உயிரினும்' என்ற சொல்லிற்குள் அழுது, வருந்திப் புகுத்தியிருக்கிறார் என்பதைக் காணும்பொழுது, நமது நெஞ்சமும் நெகிழ்ந்து, வருந்தி, உருகுகிறது.
உயிர் தன்னையுடைய எவர்க்கும் உயர்வு தாழ்வு கற்பித்துக்கொண்டே இருக்கிறது. ஒழுக்கம் அவ்வாறில்லாமல் தன்னையுடைய எவர்க்கும் ஒரே சிறப்பைச் சமமாகத் தந்து வருகிறது. ஆதலின், ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாகும் என்ற உண்மை 'உயிரினும்' என்ற சொல்லிற் புதைந்து காணப்படுகிறது.
உயிர் தன்னையுடையவனைத் தீவினையினும் செலுத்தித் துன்புறுத்தலாம். ஒழுக்கம் அவ்வாறு செய்யாமல் நல்வழியில் மட்டுமே செலுத்தி அவனுக்குப் பெயரும், புகழும், பெருஞ் சிறப்பும் தருகிறது. ஆதலின் ஒழுக்கம் உயிரினும் பெரிது என்ற இவ்வுண்மையை 'உயிரினும்' என்ற சொல் காட்டிக் கொண்டிருக்கிறது.
நமக்கு நற்றுணை நல்லவர் என்றும், பக்தர்க்கு நற்றுணை பரமன் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அம்மாதிரி உயிர்க்கும் ஒரு துணை இருக்கிறது. உயிர்க்கு ஒரு துணையும், உறுதுணையும் ஆவது உலகில் வேறு எதுவு மில்லாமல் ஒழுக்கம் ஒன்றே ஆகும். ஆதலின் உயிர்க்குத் துணையாகின்ற ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாகிறது என்ற இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல்லால் அறிந்து மகிழலாம்.
உயிரை இழந்துவிட்ட ஒருவன் உண்மையான பழியைக்கூட இழந்து விடுகிறான்! இது இவ்வுலகில் இன்றும் நாம் காணும் உண்மையாகும். ஆனால், ஒழுக்கத்தை இழந்து விட்ட ஒருவன் தான் செய்யாத பழி பாவங்களைக்கூடச் செய்யவில்லை என்று சொன்னாலும் உலகம் ஒப்பாது. ஆதலின், அவன் இல்லாத பழியையும் ஏற்க நேரிடும். ஆதலின் உயிரினும் சிறந்தது ஒழுக்கம் என்றாகிறது. இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல்லிற் கண்டு மகிழுங்கள்.
படி இல்லாமல் மாடியும் ஏறலாம், கால் இல்லாமல் நடந்தும் செல்லலாம். ஆனால் ஒழுக்கமில்லாமல் உயர் வடையவே முடியாது. ஆதலின் துன்பம், துயரம், வறுமை ஆகிய இடுக்கண்கள் எத்தனை வந்தாலும் சிறிதும் தளராமல் ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும். உயிரே போவதாயினும் அஞ்சாது, வீரத்தோடு நின்று போராடி, ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்பது வள்ளுவர் பெருமானின் கருத்து.
இதுகாறும் கூறிய இவைகளைக் கொண்டு,
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்
என்ற குறளின் பெருமையும், உயிரினும் என்ற சொல்லின் சிறப்பும், உயிரின் தன்மையும், ஒழுக்கத்தின் உயர்வும் ஒருவாறு விளங்கியிருக்கலாம். இது போன்றே பிற குறள்களிலும் புதைபொருள்களைக் காணலாம். ஆகவே, நீங்கள் திருக்குறளைப் படியுங்கள். புலவனாக விளங்க அல்ல; பேச்சாளியாக இருக்க அல்ல; ஒழுக்கமுள்ளவனாக நடக்கப் படியுங்கள். படித்து அதன்படி ஒழுகுங்கள்.
வாழட்டும் தமிழ்ப் பண்பு!
2. கொல்லும் சொல்!
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
இக்குறள் சான்றாண்மை என்ற தலைப்பின்கீழ் வந்தது. சான்றாண்மை என்பது தமிழகத்தின் சொந்தச் சொத்து. அது எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாத ஒன்று. சான்றாண்மை என்பது பல நல்ல குணங்கள் அமையப்பெற்ற ஒருவன், அக்குணங்களில் எதுவும் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடாமல் காப்பாற்றி ஆளும் ஆண்மை எனப்படும். ஆகவே, சான்றாண்மை என்பது உயர்ந்த மக்களின் சிறந்த பண்பு என்றாகிறது.
மக்களின் உயர்ந்த பண்புக்குப் பல நற்குணங்கள் இருந்து தீரவேண்டும். எது இல்லாவிடினும் இரு பெருங்குணங்களேனும் வேண்டும். அவற்றில் ஒன்று, பிற உயிர்களைக் கொல்லாமை; மற்றொன்று, பிறர் தீமைகளைச் சொல்லாமை என்று இக்குறள் கூறுகிறது.
சான்றாண்மைக்குத் திருவள்ளுவர் சொல்லில் ஒன்றும், செயலில் ஒன்றும் விரும்புகிறார் என்பதையும் இக்குறளால் அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.
உயிரைக் கொல்லாமையும், தீமையைச் சொல்லாமையும் ஆகிய இவ்விரண்டும் "நலம் தரும்" என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிடுகிறார். இதனை 'நலத்தது' என்ற சொல்லால் அறியமுடிகிறது.
கொலையுண்ட உயிர்களும் சொல்லுண்ட உயிர்களும் பெரிதும் துன்பப்படும். ஆதலின், அப்படிச் செய்யாதிருப்பதே எவ்வுயிர்கட்கும் நல்லது என்பது இக் குறளில் உள்ள 'நலத்தது' என்ற சொல்லின் கருத்து.
கொல்லுகின்றவனைத் தீயசெயலாளன் என்றும், சொல்லுகிறவனைத் தீய சொல்லாளன் என்றும் உலகத்தார் சொல்லிப் பழித்து வெறுத்து ஒதுக்குவர். ஆதலின் கொல்லாமையும் சொல்லாமையும் பிறருக்கன்றித் தனக்கும் நல்லது என்ற கருத்தும் இக்குறளில் அடங்கியே இருக்கிறது.
உயிரைக் கொல்லாமை, தீமையைச் சொல்லாமை ஆகிய இரண்டையும் 'நலத்தது' என்று ஒரு சொல்லால் ஒற்றுமைப் படுத்திய வள்ளுவர், அவற்றின் பண்பை வேற்றுமைப் படுத்திக் கூறி இருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடிய ஒன்று.
கொல்லா நலத்தினை 'நோன்மை' என்றும், தீமை சொல்லா நலத்தினை 'சால்பு' என்றும் வள்ளுவர் வகுத்துக் காட்டுகிறார். இக்குறளில் அமைந்துள்ள இச்சொற்கள் பொன்னிற் பதித்த மணிகள் என மின்னிக் கொண்டிருக்கின்றன.
நோன்பு என்பதை 'விரதம்' என வடமொழியாளர் கூறுவர். அது 'குறிப்பிட்ட சில நாட்களில் இதை நான் செய்வதில்லை' என்பதும், 'நான் விரும்புவதைப் பெறும் வரையில் இவ்வாறு இருப்பேன்' என்பதும் ஆகும். புரட்டாசிச் சனிக்கிழமைகளில் மட்டும் புலால் உண்பதில்லை என்பதும், திருப்பதிக்குப் போகும்வரை முடி எடுப்பதில்லை என்பதும் நோன்பு என்பதின்பாற்படும்.
ஆனால் 'சால்பு' என்பது குறித்த நாளில் குறிப்பிட்ட ஒன்றைச் செய்யாதிருக்கும் நோன்பினைச் சுட்டாது. அது என்றும் நின்று நிலவி, இயல்பாகவே அமைந்திருக்கின்ற ஓர் உயர்ந்த பண்பையே சுட்டிக்காட்டுவதாகும்.
நோன்பின் தன்மையையும் , சால்பின் தன்மையையும் அறிந்துகொண்ட நமக்கு, இக்குறள் நோன்பைவிடச் சால்பு உயர்ந்தது என்று வற்புறுத்துவதாகத் தெரிகிறது.
நோன்பைவிடச் சால்பு உயர்ந்தது என்று இக்குறள் கூறுவதிலிருந்து, உயிர்களைக் கொல்லாதிருப்பதை விடத் தீமைகளைச் சொல்லாதிருப்பதுதான் உயர்வு என்பது வள்ளுவர் கருத்து என விளங்குகிறது.
சான்றாண்மைக்கு இலக்கணம் கூறவந்த வள்ளுவர் அதற்கு இருக்க வேண்டிய பல நல்ல குணங்களுடன் கொல்லாமையும் சொல்லாமையும் வேண்டும் என்று மட்டும் இக்குறளில் கூறியிருக்கவில்லை. பின்னதற்கு முன்னதை ஒப்பு நோக்கும் உவமையாகக்கூடக் கூறி இருக்கிறார் என்பதை அறியும்போது, நமது உள்ளம் பெருமகிழ்ச்சியடைகிறது.
கொல்லுதற்குரிய கருவி கிடைக்கப் பெறாத ஒருவன், கொல்லாது இருந்துவிடவும் முடியும்; அது எளிது. ஆனால் சொல்லுதற்குரிய கருவி "நா" இருந்தும், அதனை அடக்கி ஆண்டு கட்டுப்படுத்திச் சொல்லாதிருப்பதுதான் அரிது. ஆதலின் கொல்லாச் செயலைவிடத் தீமை சொல்லாச் செயலை இக்குறள் உயர்வுபடுத்திக் கூறுகிறது.
கொல்லுங் குணத்தைவிட, தீமை சொல்லுங்குணத்தைக் கொடுமையாகக் கூறி இருப்பது, கொலையுண்டவன் அப்போது மட்டும் துடிதுடித்துச் சாகிறான்; ஆனால் சொல்லுண்டவன் வாழ்நாள் முழுவதும் துடிதுடித்துச் சாகிறான் என்பதன் பொருட்டு எனத் தெரிகிறது.
கொலை வாளினும் கொடியது நாக்கு எனலாம். வாள் மனிதனை விட்டுச் சிலபொழுதேனும் பிரிந்திருக்கும். நா எப்பொழுதும் மனிதனுடனே இருந்து வரும். வாளால் சிலரையே வதைக்க முடியும். நாவாற் பலரை வதைக்க முடியும். "வாள்" கண்டவரையே கொல்லும். "நா" காணாதவரையும் கொன்றுவிடும். ஆகவே, வாளினும் வலிமை உடையது "நா" என்பது வள்ளுவர் கருத்து.
நாவினாற் சுட்டு வடுவை உண்டாக்குவதைவிட, தீயினாற் சுட்டுப் புண்ணை உண்டாக்குவது நல்லது என்று முன்பு ஒரு முறை கூறினார். தீமையைச் சொல்லிப் பல நாள் துன்புறுத்தும் கொடுமையைவிட, கொலையைச் செய்து ஒருநாள் துன்புறுத்தும் கொடுமை சிறியது என்று இக்குறளில் கூறுகிறார். இக்கருத்து நம் உள்ளத்தைச் சுடுகின்றது.
"பெற்றவர்கள் பிள்ளைகளின் குறைகளையும், உற்றவர்கள் நண்பர்களின் குறைகளையும் எடுத்துக் கூறாமல் இருக்கலாமா? இருந்தால் அவர்கள் திருந்துவது எப்படி?" என்று நாம் வள்ளுவரைக் கேட்டால், அவர் "நன்றாக எடுத்துக் கூறுங்கள்; மக்களின் குறைகளை எடுத்துக் கூறித் திருத்தித் தம்மின் தம் மக்களை அறிவுடையவர்களாகச் செய்யுங்கள். அதுதான் தந்தையின் கடன். நண்பர்களின் தவறை அழ அழச் சொல்லி மட்டுமல்ல; இடித்து இடித்துக் கூறுங்கள், அதுதான் நட்பு. நான் கூறவந்தது அவர்களையல்ல; உற்றாரும் நண்பரும் அல்லாத பிறரை" என்று வெகு நயமாகக் கூறுகிறார். இவ்வுண்மையை இக்குறளில் உள்ள "பிறர்" என்ற சொல் வெகு அழகாக நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.
தீமை என்ற சொல் இக் குறளில் ஆட்சி புரிகிறது. அதற்குத் தவறு என்பதோ, குறை என்பதோ பொருளாகாது. இது, பழி பாவங்களுக்கு அஞ்சாத கொடுஞ்செயல் என்றே பொருள் பெறும். வள்ளுவர் இதனைக் கருத்திற் கொண்டே, 'பிறர் குறையை' 'பிறர் தவறை' என்று கூறாமல், 'பிறர் தீமையை' என்று அழுத்திக் கூறியிருக்கிறார் எனத் தெரிகிறது.
ஒருவருடைய தீமைகளை அவரது நலம் கருதுவோர் அவரிடமே நேரிற் சென்று எடுத்துக் கூறியும்கூடத் திருத்தலாம் என்பது வள்ளுவருடைய கருத்து. இதனைக் 'கண்ணின்று கண்ணறச் சொல்லினும்' என்ற குறட் சொல்லே மெய்ப்பிக்கும். இக்குறளில் கூறியிருப்பது அது வல்ல என்றும், பிறருடைய தீமைகளைப் பிறரிடத்தே போய்க் கூறும் கொடுமையினையே என்றும் தெளிவாக அறியலாம்.
ஒருவருடைய தீமைகளைப் பிறரிடம் கூறாமல் அவரிடமே சென்று கூறுவது குளிர்ச்சி உள்ளங் கொண்டவர்கள் செயலாகுமே ஒழிய, எரிச்சல் உள்ளங் கொண்ட மக்களின் செயலாகாது என்பதை எண்ணியே, வள்ளுவர் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
'நலத்தது' என்ற சொல்லை இங்கு எத்தனை முறை படித்தோம். அதன் பொருள் விளங்கிற்றா நமக்கு? நல்லது, நல்லது என்ற பொருளில்தானே அதை அறிந்தோம். அது தவறு. அதன் பொருள் அதுவல்ல; அதன் உண்மையான பொருள் 'நல்லதைச் சார்ந்தது' என்பதேயாகும்.
உயிர் கொல்லாச் செயலையும் தீமை சொல்லாக் குணத்தையும் வள்ளுவர் 'நல்லதைச் சார்ந்தது' என்று கூறினாரேயொழிய, 'நல்லது' என்று கூற அவருடைய உள்ளம் ஒப்பவேயில்லை. இக் கருத்தை இக் குறளில் உள்ள 'நலத்தது' என்ற சொல்லிற் காணும்பொழுது நம் உள்ள மெல்லாம் இனிக்கிறது.
கொல்லாமையும் சொல்லாமையும் நல்லதைச் சார்ந்தது என்று இக் குறள் கூறும்பொழுது, வேறு எதையோ நல்லது என்று இக் குறள் கூறுவதுபோலத் தெரிகிறது. அது எது? என ஆராயும்பொழுது பிற உயிர்களை வளர்த்து வாழ்தலும், பிறர் நன்மைகளைச் சொல்லி வாழ்தலுமே எனப் புலப்படுகிறது.
இவ்வரிய பொருளை விளக்கவே இக்குறள் தோன்றியிருக்கிறது என்பதை மலைமீது நின்றும் கூறியாக வேண்டும்.
இத்தனை பொருள்களும் இக் குறளின் ஒன்றே முக்கால் அடியில், ஏழு சீர்களில், எட்டே சொற்களில் இருக்கின்றன என்று அறியும்பொழுது, நாம் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குறளை மறுபடியும் படியுங்கள் :
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
எப்படி இக் குறள்? இந்த ஒரு குறளே நமக்கு, நோன்பு, சால்பு, பண்பு, நேர்மை, அறிவு, ஆண்மை, உயர்வு, வாழ்வு ஆகிய செல்வங்கள் அனைத்தையும் தருமானால், இன்னும் திருக்குறளில் உள்ள 1329 குறள்களும் என்னென்ன செல்வங்களைத் தரும்? என்பதை எண்ணிப் பாருங்கள். எண்ணிப் பார்த்ததும், குறளினை எடுத்து ஊடுருவிப் படித்து, அவற்றிலுள்ள புதை பொருள்களையெல்லாம் அறிந்து, பிறருக்கும் வாரி வழங்கிச் சிறப்பெய்தி வாழுங்கள்.
வளரட்டும் சால்பு!
3. கோலொடு நின்றான்!
வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு
என்பது திருக்குறளில் ஒரு குறள்.
கல்வியைப் பற்றிக் கூறிப் பின் கல்லாமையைப் பற்றியும் கூறியதுபோல, வள்ளுவர் செங்கோன்மையைப் பற்றிக் கூறிப் பின் கொடுங்கோன்மையைப் பற்றியும் கூறும் பொழுது, இக் குறளை இரண்டாவதாகக் கூறியுள்ளார்.
இதில், 'கோன்மை' என்பது கோலின் தன்மை என்றாகி, அரசனது முறை செய்யுந் தொழிலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
கோடாத கோலைச் 'செங்கோல்' என்றும், கோடுங்கோலைக் 'கொடுங்கோல்' என்றுங் குறிப்பிட்டு, மன்னனது நன்முறையையும் வன்முறையையும் விளக்குவது ஒரு தமிழ் மரபாகும்.
மன்னன் கைப்பிடிக்கும் செங்கோலானது வணிகன் கைப் பிடிக்கும் துலாக்கோல் போல் ஒரு பக்கமும் சாயாது நடுவு நிலையில் நிற்க வேண்டும் என்பது தமிழர் நெறி.
தனக்குச் சேரவேண்டிய வரி அல்லாத பிற பொருள்களை மன்னன் மக்களிடத்தில் விரும்பிப் பெறுவது கொடுங்கோன்மை ஆகும் என்பது இக் குறளின் பொருள்.
மன்னன் மக்களிடத்தில் பிற வழிகளில் கேட்டுப் பெறுகின்ற பொருள்களை, 'இரவு' என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிட்டுக் காட்டுவது, அரசர்களது நெஞ்சத்தில் அம்பு கொண்டு எய்வது போன்று இருக்கிறது.
மன்னன் மக்களிடம் கொடுங்கோன்மையாற் பெற்ற செல்வம் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், அது இரந்து பெற்ற இழிந்த செல்வமேயாகும் என்பது வள்ளுவரது முடிவு.
இரந்து பெறுகிற இழிகுணம் படைத்த ஒருவனைக் 'கொடுங்கோலன்' எனக் கூறினாலும், அவனை மன்னனாக ஒப்புக்கொண்டதாக ஆகுமாம். ஆகவே, அவனைக் கொடுங்கோலன் எனக் கூற ஒப்பாமல் 'வெறுங்கோலன்' எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
உறுப்புக்கள் குறைந்துள்ள குருடும் நொண்டியும் ஊன்றுகோல் கொண்டு நின்று புரியும் இரத்தல் தொழிலை, வெறுங்கோல் கொண்டு நிற்கும் மன்னன் விரும்பிச் செய்வது வெறுப்பிற்கு உரியது என இக் குறள் கூறாமற் கூறுகிறது.
கோலோடு நின்ற மன்னவன் மக்களிடம் பெறும் பொருளை 'இரவு' என்று வள்ளுவர் சொல்லாற் குறிப் பிட்டு, கருத்தால் அதனைக் 'களவு' என்று காட்டுவது எண்ணி மகிழ வேண்டிய ஒன்று.
கோல் கொண்டு நின்ற இத்தகைய மன்னர்களது கொடுஞ்செயலுக்குக் காடுகளில் வேல்கொண்டு நின்று, 'இடு' வென்று கூறி வழிப்பறி செய்யும் கள்வரது கொடுஞ்செயலை இக் குறளில் உவமையாகக் கூறியிருப்பது, நம் உள்ளத்தையெல்லாம் சுடுகிறது.
'வேலொடு நின்றான்' என்ற சொற்களிலிருந்து, கள்வன் அன்பு, அறம் முதலிய எதனொடும் நில்லாமையையும், மன்னன் 'கோலொடு நின்றான்' என்ற சொற்களிலிருந்து அவன் அறிஞர், அமைச்சர் முதலிய வேறு எவரோடும் நில்லாமையையும் புலப்படுத்துவது எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.
கொடாவிடில் துன்புறுத்துவோம் என்பதில் மட்டுமல்ல; கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைக்காது என்பதிலும் வேலொடு நின்ற கள்வனும், கோலொடு நின்ற மன்னனும் செயலொடு ஒத்து நிற்பது உய்த்துணரத்தக்கது.
வேலொடு நின்றவன் முன்பும் கோலொடு நின்றவன் முன்பும் செல்வமொடு நிற்பதைக் காட்டிலும் வறுமையொடு நிற்பது நல்லது என்பது இக்குறளின் திரண்ட கருத்து.
வேலொடு நிற்பவன் வாழும் காடும், கோலொடு நிற்பவன் வாழும் நாடும், பொருளொடு நிற்பவன் வாழத் தகுதியற்றவை என்பது இக் குறளின் முடிவு.
வேலொடு நிற்பவன் கொடுமை ஒருபொழுது மட்டுமே துன்பம் தரும்; கோலொடு நிற்பவன் கொடுமையோ எப்பொழுதும் துன்பம் தரும். ஆதலின் கோலின் கொடுமைக்கு வேலின் வெம்மை ஏற்ற உவமையாக இல்லை என வள்ளுவர் உள்ளம் வருந்தியிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த உவமை பொருந்தாமையாலும், இதனினும் சிறந்த உவமை கிடைக்காமையாலுமே வள்ளுவர் இக் குறளில் 'என்றது போலும்' என ஐயப்பாட்டுடன் கூறியுள்ளார். இன்றேல் அவர், 'என்றது போல' எனக் கூறியிருக்கக்கூடும்.
உயிர்க்கு உடலாகவும், உடலுக்கு உயிராகவும் புவி மன்னர்களைக் கூறுவது கவி மன்னரது வழக்கு. ஆதலின், உடலை வருத்தும் வேலும் உயிரை வருத்தும் கோலும் இக் குறளில் குடி கொண்டிருக்கின்றன போலும்.
கோலைப் பிடிக்கவேண்டிய மன்னன் தன் பண்பை அடியோடு இழந்துவிட்டு, வேலைப் பிடிக்கின்ற வேடனின் பண்பைப் பெற்றிருக்கிறான். அவ்வாறிருந்தாலும், அவன் மன்னனும் அல்ல, மறவனுமல்ல, மனிதனும் அல்ல என்பதை இக் குறளாலும் நன்கு அறியலாம்.
முறைசெய்யும் மன்னவன், கொலை செய்யும் வேடனின் குணத்தைப் பெற்றுவிடுவானானால், கொடியோரைத் தேடித் தண்டித்து நல்லோரைக் காக்கும் நற்றொழிலைச் செய்ய அவன் விரும்பமாட்டான் என்ற கருத்தும் இக் குறளில் மறைந்து காணப்படுகிறது.
ஈகைத் தொழிலுக்குரிய மன்னன் இரத்தல் தொழிலிற் புகுந்து மக்களிடம் விரும்பிக் கேட்டுப் பெறுகின்ற பொருளே வழிப்பறிக் கொள்ளை என்றாகுமானால், கொடாவிடில் துன்புறுத்துவேன் என அச்சுறுத்திப் பெறும் பொருளை எதனொடு ஒப்பிடுவது? என்பதை எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது இக் குறள்!
கோலொடு நிற்கும் அரசர்கள் இன்று இல்லை எனினும் கொடுமையோடு நிற்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இன்று உள்ளனர். அவர்கள் கோலொடும் வேலொடும் கொடுமையொடும் நில்லாமல் குறளொடு நிற்கவேண்டும் என்பது நமது விருப்பம்.
இவ் ஒரு குறள் இவ்வளவு பொருள்களைத் தருமானால் பிற குறள்கள் என்னென்ன தரும்? என்று எண்ணிப்பாருங்கள். எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! சிந்தியுங்கள் ஆழ்ந்து! அவ்வளவோடு நின்றுவிடாதீர்கள்! செய்கையிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.
வாழட்டும் தமிழகம்!
4. சேர்ந்தாரைக் கொல்லி
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
என்பது திருக்குறளில் ஒரு குறள்.
சினம் என்பது மக்களுக்கு வேண்டாதவைகளில் ஒன்று என்று இக் குறள் கூறுகிறது.
'சினம், சுடும்' என்ற சொற்கள் முதலும் முடிவுமாகக் கொண்டு நின்று சினத்தின் பண்பையும் குறளின் நயத்தையும் விளக்கிக்கொண்டிருக்கின்றன.
தீ சுடும் என்று நாம் பிள்ளைகளை எச்சரிப்பதுபோல, சினம் சுடும் என்று வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார்.
கோபம் கொண்டவனுடைய குருதி, நரம்பு, நெஞ்சு, மூச்சு அனைத்தும் கொதிக்கும் என்பதை அறிந்தே ஆசிரியர் 'சுடும்' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
சினம் 'சுடும்' என்று கூறி, அதனை நெருப்பாகக் காட்டி, அதற்குச் சேர்ந்தாரைச் கொல்லி என்று ஒரு பெயரையும் இட்டு, அப் பெயராலேயே அதன் இழி தொழிலையும் விளக்குகின்ற ஆசிரியரின் திறமை எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.
நிலத்தை அறைந்தவன் கை வலி எடுக்கத் தப்பாதது போலச் சினத்தைச் சேர்ந்த மக்கள் கேடு அடையத் தப்புவது இல்லை என்பதை வலியுறுத்தவே, அதற்குச் 'சேர்ந்தாரைக் கொல்லி' எனப் பெயரிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
சினம் பிறந்தவிடத்தை மட்டுமன்றி அது புகுந்த இடத்தையும் கொல்லும் என்ற கருத்தைச் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்ற சொற்றொடர் வெளிப்படையாக விளக்கிக் கொண்டிருக்கிறது,
நெருப்பு எடுத்தவனையும் அடுத்தவனையும் சுடுவது போல, சினம் கொண்டவனையும், கொடுத்தவனையும் அழிக்கும் என்ற பொருளைச் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் சிலேடையாக கண்டு மகிழுங்கள்.
சினம் கொண்டு வைவது சுடுவதை ஒக்குமா? என்ற ஐயப்பாடு எவருக்கேனும் ஏற்பட்டு விடலாம் என்று எண்ணியே, வள்ளுவர் அதனை 'நாவினாற் சுட்ட' என்ற சொற்களால் அடுத்து ஒரு குறள் மூலம் விளக்கியிருக்கிறார் போலும்.
சினம் ஒருவனிடத்தில் சேரும், அவனைக் கொண்டு மற்றொருவனைக் கொல்லும்; பிறகு தன்னைச் சேர்ந்தவனையும் கொலைத் தண்டனைக்கு ஆளாக்கிக் கொன்றுவிடும் என்ற நிகழ்ச்சிகளை 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் கண்டு நடுங்க வேண்டியிருக்கிறது.
சினம் தாக்கியவனை, தாக்கப்பட்டவனை மட்டுமின்றி இவ்விருவரையும் சேர்ந்தவர்களையெல்லாம் சேர்ந்து துன்பப்படுத்தும் என்ற பொருளும் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் சேர்ந்தே இருக்கிறது.
நண்பர், பகைவர், இரண்டுமற்ற பிறர் ஆகியவர்களை மட்டுமின்றி, 'சினம்' இனத்தையும் சுடும் என்று இக் குறள் கூறுவது ஒரு பயங்கரமான அறிவிப்பு ஆகும்.
கோபம் கொண்டவனை விட்டு அவனது சுற்றத்தார் விலகிப் போய்விடுவர், அவன் தனித்துநின்று வருந்துவான் என்பதை 'சினம் இனத்தைச் சுடும்' என்ற சொற்கள் நமக்கு நன்றாக அறிவிக்கின்றன.
'சினம் இனத்தைச் சுடும்' என்று வள்ளுவர் அழுத்திக் கூறுவதிலிருந்து, அன்பு இனத்தைத் தழுவும் என்பதை அவர் கூறாமற் கூறுவதாகக் கொள்ளவேண்டும்.
இனத்தைச் சுடுவது மக்கள் பண்புமல்ல; மரத்தின் பண்புமல்ல. மரம் மரத்தையும், மக்கள் மக்களையும் சுட்டுத் தொலைப்பதில்லை. ஆனால் நெருப்பேறிய மரங்கள் இனத்தைச் சுட்டழிப்பதுபோல, சினம் ஏறிய மக்களும் தம் இனத்தைச் சுட்டழிப்பர் என்று இக் குறள் கூறுவது வியக்கக்கூடியதாகும்.
"இன்பத் தெப்பமாயிருப்பினும் சரி, அதிலுள்ள மரம் தன் இனமாயிருப்பினும் சரி, சிறிதும் சிந்தியாமல் நெருப்பேறிய மரங்கள் சுட்டுத் தீர்ப்பதுபோல, சினம் ஏறிய மக்களும் இனமென்றும் நல்லோர் என்றும் கருதாமல் வதைத்துத் தீய்த்துவிடுவர்" என்று இக் குறள் கூறி, அபாயத்தைக் காட்டி எச்சரித்தாலும், உவமை நயம் காட்டி நம்மை மகிழவைக்கிறது.
சுடுகின்ற செயல் நெருங்கி நடைபெறுவது ஆதலின் 'சுடும்' என்ற சொல்லுக்கு இனத்தார் விலகிப் போய் விடுவர் என்று பொருள் காண்பதைவிட "இனத்தார் நெருங்கி நின்றே பகைத்துக் கொண்டிருப்பர்" என்று பொருள் காண்பது நயமாகத் தோன்றுகிறது.
இல்லறத்தாரை மட்டுமல்ல, துறவறத்தாரையும் இச்சினம் பற்றுமானால், அது அவருடைய தவத்தையும் அழித்து, பிறவிக்கடலைக் கடக்க உதவுகின்ற பேரின்பத் தெப்பத்தையும் அழித்துவிடும் என்பதை இக் குறளால் அறியலாம்.
தீப்பற்றிய மரங்களைத் தன்னினம் என்று கருதி இரக்க மனம்படைத்து ஏற்றிச் செல்லும் தெப்பமானது தானே அழிவதைப்போல், சினம் கொண்ட மக்களை இனம் என்று கருதித் தன்னிடத்தே வைத்து ஆதரிக்கும் மக்களும் அழிந்தொழிவார்கள் என்ற பேருண்மை இக் குறளிற் புதைந்து கிடக்கிறது.
பேய்கொண்ட, கள்ளுண்ட, பித்துண்ட, தாக்குண்ட மக்கள் அனைவருமே அறிவிழந்து நிற்பர். ஆனால் சினம் கொண்ட மக்களோ வாழ்விழந்து அழிவர் என்று வள்ளுவர் கூறுவது, அதன் கொடுமையைக் கடுமையாகக் காட்டுகிறது.
'சினம் என்பது எடுத்தவரைச் சுட்டு, அடுத்தவரைக் கொன்று, சேர்ந்தவரை அழித்து, சேராதவரைத் தீய்த்து, இனத்தையும் பகைத்து, இன்ப வாழ்வையும் கெடுக்கும் ஒரு கொடு நெருப்பு. ஆதலின் அதனைக் கொள்ளாதிருப்பது நல்லது' என்பது இக் குறளின் திரண்ட கருத்து.
வளர விரும்பும் மரங்கள் நெருப்பேற்கக் கூடாது; வாழ விரும்பும் மக்கள் சினம் ஏற்கக்கூடாது என்பது இக்குறளின் முடிவு.
இவ்வொரு குறளில் இவ்வளவு கருத்துக்கள் இருக்குமானால், இன்னும் 1329 குறள்களில் எவ்வளவு இருக்கும்? எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! உணருங்கள் உண்மையை! அவ்வளவோடு நிறுத்திவிடாதீர்கள்! செய்கையிலும் செய்துகாட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.
வாழட்டும் தமிழகம்!
5. நிலமென்னும் நல்லாள்
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது உழவு என்னும் தலைப்பில் உள்ளது.
பண்புடைமையை, நாணுடைமையை, குடிப்பெருமையைக் கூறிய பின்னும், வறுமையை,இரவை, இரவச்சத்தைக் கூறுவதன் முன்னும், உழவைப்பற்றிக் கூறியிருப்பது தயமுடையதாகக் காணப்படுகிறது.
உழவுத்தொழில் சிறப்புடையது! உலகம் உழவர் பின்னே செல்லக்கூடியது! உழுவார் உலகுக்கு அச்சாணி! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! உழவர் கைமடங்கின் உலகில் வாழ்வில்லை என்றெல்லாம் கூறியபின், இறுதியாகக் கூறிய குறள் இது.
உழவுத் தொழில் சிறந்திருந்தும், அதனைச் செய்யாது சோம்பித் திரியும் மக்களின் இழிநிலையை இக்குறள் அருமையாக விளக்கிக் கொண்டிருக்கிறது.
எம்மிடம் எப்பொருளுமில்லை என்று கூறிச் சோம்பலும் வறுமையும் கொண்டு வாடியிருக்கும் மக்களைக் கண்டு நிலம் நகைக்கும் என்பது இதன் பொருள்.
எமக்கு எத்தொழிலுமில்லையே என்று ஏங்கித் திரியும் வேலையில்லாத் திண்டாட்டக்காரர்களைக் கண்டும் நிலம் நகும் என்பதும் இருக்குறளின் கருத்தாகும்.
இப் பரந்த உலகில் நிலங்கள் பலவிருந்தும், அதனைத் திருத்தி உழுது, விளைத்து உண்டு வாழாது, வீணாக வறுமையால் வாடி வருந்தி வாழ்கின்ற மக்களைக் கண்டால் நிலம் நகைக்கும் என்று இக்குறள் கொட்டி முழக்குகிறது.
வள்ளுவர் வாழ்ந்த அக்காலத்தில் எவரும் சோம்பி இருந்ததில்லை என்ற வரலாறு ஒன்றைக் ‘காணின்’ என்ற ஒரு சொல் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.
‘இலன்’ என்று ஒருமையிற் கூறாமல், ‘இலம்’ என்று பன்மையிற் கூறியிருப்பதிலிருந்து, எங்கேனும் ஓரிருவர் காணப்பட்டாலும், சோம்பேறிகளைப் பெருந் தொகையினராகக் காணமுடியாது என்ற கருத்தும் இதில் வலியுறுத் தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
‘நகும்’ என்ற சொல்வினைக்கொண்டு அதை மகிழ்ச்சிச் சிரிப்பு எனக் கொள்வதற்கில்லை. அது ஒரு ஏளனச் சிரிப்பு என்பதை இக்குறள் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.
உழுது உண்டு வாழ நிலங்கள் இருக்கின்றபொழுது, ஒருவன் தனக்குப் பொருளில்லையென்றாவது, வேலையில்லை என்றாவது கூறிக்கொண்டு வறுமை வாழ்வு வாழ்வது இழிவு, அது ஏளனத்திற்குரியது என்பது இக் குறளின் முடிவு.
அத்தகைய இழிந்த வாழ்வு வாழும் மக்களைக் கண்டு, நல்வாழ்வு வாழும் மக்கள் நகைப்பார்கள் என்று கூறினால் நன்மக்கட்குப் பழி வந்துவிடக் கூடும். ஆதலின் அதை விடுத்து இறுதியாக அந்த நிலமே நகைக்கும் எனக் கூறியிருக்கவேண்டுமெனத் தோன்றுகிறது.
'நிலம் நகும்’ என்பதிலுங்கூட நிலத்தை ஒரு பெண்ணாக உவமித்து, நிலப்பெண் சிரிப்பாள் என்று கூறி வள்ளுவரும் அந்த நகைப்பில் பங்குபெற்று நகைப்பது நமக்கும்கூட நகைப்பை உண்டாக்கிவிடுகிறது.
ஆண்மகனுக்குத் தன்மான உணர்ச்சியையூட்டும் ஒரு வழி உன் செயலைக்கண்டு பெண்பிள்ளை சிரிப்பாள் என்பது தான் என்பதை வள்ளுவர் அக்காலத்திலேயே அறிந்து இக் குறளில் புகுத்தியிருப்பது நமக்குப் பெருவியப்பை அளிக்கிறது.
பெண் மக்களிலும்கூடக் கெட்ட பெண்கள் அல்லாத நல்ல பெண்களே எள்ளி நகையாடுவர் என்பதை ‘நல்லாள் நகும்’ என்ற சொற்கள் நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
‘நல்லாள்’ என்ற சொல்லுக்கு நலமுடையவள், அழகுடையவள், ஒழுக்கமுடையவள் என்பதோடு, இல்லாள் என்றும் பொருள் கொள்ளலாம். இக்குறளுக்கு முன்னுள்ள குறளில், ‘இல்லாளின் ஊடிவிடும்’ என்றார். இக்குறளில் ‘இல்லாள் நகைத்துவிடுவாள்’ என்றும் கூறுகிறார்.
தன்னைத் தழுவி மகிழ்வித்து மகிழ்ந்து வாழ விரும்பாத கணவனைக் கண்டு இல்லாள் வெம்பி உளம் புழுங்கிக் குறுநகை கொள்வதுபோல், நிலமும், தன்னைத் தழுவி உழுது விளைவித்து உண்டு வாழ விரும்பாத ஆண்மகனைக் கண்டு நகையாடும் என்பது பொருளமைதியுள்ள ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டு ஆகும்.
‘நகும்’ என்பதோடு வள்ளுவர் விட்டுவிட்டதிலிருந்து, தன்னைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத ஆண் மகனைக் கண்டு நிலம் நகைப்பதோடு விட்டுவிடும் என்பதும். அவ்வாறே தன்னைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத கணவனைக் கண்ட நல்லாளும் நகைப்பதோடு விட்டுவிடுவாள் என்பதும் பெறப்படும். இது பெண்மக்களின் தரத்தையே உயர்த்திக் காட்டுவதாக இருக்கிறது.
‘காணின் நகும்’ என்ற சொற்றொடர் கடுங்காட்டு நிலத்தையோ, கணவனற்ற மனைவியையோ சுட்டிக் காட்டாமல் எதிரில் எளிதில் இருப்பவைகளையே சுட்டிக் காட்டி, அவைகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத மக்களைக் கண்டு நகைப்பதைப் புலப்படுத்துவது நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. நிலமகளையும் குலமகளையும் இன்பப் பொருளாக்கி ஆண்மகனை இன்பம் துய்ப்பவனாக இக் குறளில் உவமித்திருப்பது வள்ளுவரின் பேரறிவை விளக்குவதாக அமைந்திருக்கிறது.
நல்லாளும் நன்னிலமும் இருந்தும் நல்வாழ்வு வாழாத நாணிலியைக் கண்டு மனைவி சிரிப்பாள், நிலம் சிரிக்கும் என்பது மட்டுமல்ல; இந்த மாநிலமே சிரிக்கும் என்ற கருத்தும் இக் குறளில் அடங்கியே இருக்கிறது. இதனை நிலம் நகும் என்பதாலறியலாம்.
பருவ மங்கையர் பலரிருக்கும் ஊரில், விரும்பும் ஒருவரை மணந்து இவ்வாழ்வு வாழவேண்டும் என்ற மணக் கவலையோ மனக்கவலையோ இன்றி வீணில் திரிந்து வெறு வாழ்வு வாழ்கின்ற இளைஞர்கள் சிலரைக் கண்டால் அந்நல்லாள்கள் இவ்வாறே நகைப்பர் என்ற கருத்தும் இக் குறளில் இல்லாமலில்லை!
பெண் மக்களின் நல்வாழ்வுக்கு, ஆண்மக்கள் எவ்வளவு இன்றியமையாதவர்களோ, அந்த அளவிற்கு நிலங்களின் செழிப்பிற்கும், ஆண்மையுள்ள மக்கள் இன்றியமையாதவர்கள் என்பது இக் குறளால் பெறப்படும் உண்மையாகும்.
இருப்பாரை என்ற சொல்லுக்கு மாறாக, 'இரப்பாரை' என்ற சொல் அமைந்திருக்க வேண்டும் எனக் கருதுபவரும் உண்டு. அவ்வாறாயின், உழைத்து உண்டு வாழ நிலமிருந்தும் இரந்து உண்டு வாழ விரும்புவது இழிந்த செயல் என்பது பொருளாகும்.
நிலமென்னும் நல்லாள் முயற்சியுடைய ஆண்மகனுக்குச் செல்வமனைத்தும் வழங்குவாள். நல்லாளாகிய இல்லாள் அன்புடைய கணவனுக்கு அனைத்தையும் வழங்குவாள் என்பது இக்குறளின் திரண்ட கருத்தாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய வள்ளுவர் பெருமான் வாக்கிலிருந்து இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், தொழிலாதார அறிவை வளர்க்கவும், பொருளாதார நிலையை உயர்த்தவும் தோன்றிய இக் குறளை இன்னும் ஒருமுறை படிக்கிறீர்களா? படியுங்கள்.
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
நகைத்து விட்டுவிடும் இக் குறளைப்போல நீங்களும் இதனைப் படித்து விட்டுவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் உழவுத் தொழில்!
6. வேட்டலின்
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
என்பது திருக்குறளில் ஒரு குறள்.
இது ‘புலால் உண்ணாமை’ என்ற தலைப்பில் வந்த ஒன்று. இத் தலைப்பும்கூட ‘அருளுடைமை’ 'தவம்’ என்ற இரு தலைப்புகளுக்கிடையில் அமைந்து ஒரு தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது.
அறம் என்பது ‘கடமை’ என்றாகும். கடமையில் தலையாயது நல்லதைச் செய்து அல்லதைத் தவிர்ப்பதே! ஆதலின் இக்குறள் ‘நன்று’ என்று கூறி நல்லது ஒன்றைச் செய்யத் தூண்டுகிறது.
நல்லது கெட்டது என்பது எழுத்தில், பேச்சில், எண்ணத்தில், செயலில் மட்டுமல்ல; உண்ணும் பொருளிலும் உண்டு என்று உணர்த்துகிறது இக் குறள்.
‘உண்ணாமை நன்று’ என்பதிலிருந்து, உண்ணக்கூடாத பொருள்களில் புலாலும் ஒன்று என்பது வள்ளுவர் கருத்து என அறியவேண்டியிருக்கிறது.
‘உண்பது தீது’ என்று கூறாமல், உண்ணாமை நல்லது என்று கூறியிருப்பது தமிழ்ப்பண்பும், தமிழர் நெறியும் ஆகும் என்பதனை இக் குறள் நன்கு அறிவிக்கிறது.
புலாலுண்ணாமை மட்டுமல்ல, உயிரைப் போக்காமையும் நல்லது என்பது இக் குறளின் கருத்து. இதனை ‘உயிர் செகுத்து’ என்ற சொற்கள் அறிவிக்கின்றன.
தன் ஊனைப் பெருக்குவதற்காகப் பிற ஊனைத் தின்பதும் தன் உயிரை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களை அழிப்பதும் மக்கட் பண்புடையவர் செயல் அல்ல என்பதை இக் குறள் கூறாமற் கூறுகிறது.
தொல்லைகளைக் கண்டு ஈ, எறும்புகளைக் கொல்லு வதைவிட, பயங்கொண்டு பாம்பு தேள்களைக் கொல்லு வதை விட, வஞ்சங்கொண்டு பகைவர்களைக் கொல்லுவதைவிட, ‘உண்ணவேண்டும்’ என்ற ஆசை கொண்டு உயிர்களைக் கொல்லுவது கொடுமையினுங் கொடுமையாகும் என்பது இக்குறளின் கருத்து. இதனை ‘உயிர் செகுத்து உண்ணாமை’ என்ற சொற்றொடர் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கொன்று உண்ணும் மக்களைக் கண்டும் வள்ளுவர் வருந்தாமல் “துன்பம் நேரும், பாவம், நரகம் கிடைக்கும்” என்று அச்சுறுத்தியுங் கூறாமல், “கொன்று உண்ணாதிரு! அது நல்லது” என்று மட்டும் கூறியிருப்பது புண்பட்ட நெஞ்சத்தை உண்டாக்க விரும்பாத அவரது பண்பட்ட உள்ளத்தையே நமக்குக் காட்டுகிறது.
“கொல்லத்தான் கூடாது? கொன்றதை உண்ணலாம்” என்ற கொள்கையினரின் வாதத்தை வள்ளுவர் மறுத்து, “கொல்லுவதும் தீது; அதை உண்பதும் தீது” என்ற தமது கருத்தை இக்குறள் மூலம் நன்கு விளக்கிக் காட்டுகிறார்.
கொல்லாமையும், உண்ணாமையும் “நல்லது” என்பதோடு இக்குறள் நின்றுவிடவில்லை. இவ்வாறு செய்வதால் பெரும் பலனும் உண்டு என்பதையும் இக்குறள் அறிவிக்கிறது.
“வேள்விகளைச் செய்வதால் விரும்பியவைகளைப் பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. அத்தகைய பெரும்பேறுகளை ஊன் உண்ணாமையாற் பெறமுடியும் என்பது வள்ளுவர் நம்பிக்கை” என்பதை இக்குறளால் அறிய முடிகிறது.
அது எவ் ‘அளவு’ நல்லது? என்பதை அளந்து காட்ட ஒன்று, பத்து, நூறு என உயர்த்திப் பின் ஆயிரம் வேள்விகளைச் செய்து பெறுகின்ற பெரும் பேறுகளை, ‘புலால் உண்ணாமை’ என்ற ஒன்றினால் மட்டும் பெறமுடியும் என, அளவைக் கணக்கில் இக்குறளில் அளந்து காட்டுவதைக் கண்டு மகிழுங்கள்.
இவ் ‘அளவு’ கூறியும், வள்ளுவரது உள்ளம் அமைதி பெறவில்லை. “ஒன்றின் உயிரைக் கொன்று, அதன் ஊனை உண்ணாமைக்கு ஆயிரம் வேள்வியும் ஈடு ஆகா” என எண்ணுகிறார். எண்ணியபிறகு, “அதனினும் இது நல்லது” என்று கூறிவிட்டார். இவ் உண்மையை வேட்டலின் என்ற சொல்லே அறிவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஆயிரம் வேள்விகளையும் வேள்வி என்று பொதுவாகக் கூறிவிடாமல், ‘நெய்யை ஊற்றிச் செய்யப்படும் வேள்விகள்’ என்று குறிப்பிட்டிருப்பது பெரிதும் நயம் உடையதாகக் காணப்படுகிறது. இதனை “அவி சொரிந்து” என்ற இரு சொற்கள் காட்டுகின்றன.
உயிரை வதை செய்து செய்யப்படும் வேள்விகளை ஊன் உண்ணாமைக்கு ஒப்பிட்டுக் கூற வள்ளுவரது உள்ளம் ஒப்பவில்லை என்பதை இக் குறள் வெளிப்படையாகவே காட்டி விடுகிறது.
“வேள்வி வேட்டலைவிடப் புலால் உண்ணாமை உயர்ந்தது” என்று இக் குறள் கூறுவது எதன்பொருட்டு? என எண்ணிப் பார்க்கும்பொழுது வேள்வியில் தன் நல விருப்பும் புலால் உண்ணாமையில் தன் நல மறுப்பும் கலந்திருப்பதன் பொருட்டு! எனத் தோன்றுகிறது,
வடமொழி எதை நல்லது! சிறந்தது! உயர்ந்தது! என்று இன்றும் கூறிக்கொண்டிருக்கிறதோ, அதைத் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏற்கவில்லை என்பதை இக்குறள் இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது.
உயிர்களைக் கொன்று, அதன் ஊன் முதலியவைகளை வேள்வித் தீயிற் கொட்டி, விண்ணவரை மகிழ்வித்து வேண்டியவைகளைப் பெறலாம் என்பது வேதங்களின் கருத்து. அவ்விதமாயின் புலாலுண்ணும் தேவர்களைவிட உண்ணாதிருக்கும் மக்கள் நல்லவர்கள் என்பது இக்குறளின் கருத்து.
குறளை மறுபடியும் படியுங்கள்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று
பிற குறள்களிலும் இவ்வாறே புதைபொருள்கள் பல புதைந்து கிடக்கின்றன. ஆதலின் குறளை மேற்போக்காகப் படிப்பதைவிட ஊன்றிப் படிப்பது நல்லது. படித்து மகிழ்வதைவிட, அதன்படி நடந்து மகிழ்வது மிகவும் நல்லது.
"வாழட்டும் அன்புள்ளம்! வளரட்டும் அறநெறி!"
7. குடம்பை
குடம்பை தனித்தொழியப் புட்புறங் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு
இது கொல்லாமைக்குப் பின்னும் துறவுக்கு முன்னும் கூறியுள்ள "நிலையாமை" என்ற தலைப்பில் உள்ள ஒன்று.
நிலையாமையைப் பற்றிக் கூறவந்த வள்ளுவர், "நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்பவை என்று எண்ணி வாழும் வாழ்வு ஒரு இழிந்த வாழ்வு" என்று எடுத்த எடுப்பில் கூறியிருக்கிறார்.
அடுத்து, 'நெருநெல்', 'நாச்செற்று', 'நாளென', 'ஒரு பொழுதும்', 'கூத்தாட்டு' என்று தொடங்கும் குறள்களின் மூலம், "உலகம் நிலையாது, வாழ்வு நிலையாது, உயிர் நிலையாது, பொழுது நிலையாது, செல்வம் நிலையாது" என்று கூறிப் பின் இக் குறள் மூலமும் "நட்பு நிலையாது" என்றும் கூறுகிறார். இது வியப்பிற்குரியது.
உற்றார் உறவினர், மனைவி மக்கள் போன்ற எவரையும் நாம் ஒன்றாகவே கருதி ஒருமையிலேயே அழைக்கிறோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரையும் உடலொன்றும் உயிரொன்றும் ஆக இரண்டு எனக் கருதும்படி செய்கிறது இக்குறள்.
இரு கூறுபட்ட உடலும் உயிரும் மாறுபட்டும், வேறுபட்டும் தோன்றாமல், ஒன்றுபட்டுத் தோன்றுகின்ற இந்நிலையை வள்ளுவர் “நட்பு” என்று இக் குறளில் குறிப்பிடுவது மிகுந்த பொருளமைதியுடையதாகும்.
உயிர் வருந்தினால் உடல் இளைத்துவிடுகிறது. உடலில் ஊசி குத்தினால் உயிர் துடிக்கிறது! ‘என்ன உடம் போடு உயிரிடை நட்பு?’ என்று எண்ணிப் பார்க்கச் செய்கிறது இக்குறள்.
உடல் தோன்றும்போதே உயிரும் தோன்றி, உயிர் பிரிந்தபோதே உடலும் அழியத் தொடங்குவதைக் காணும் பொழுது, “நட்பு” என்பது இம்முறையில்தான் இருக்க வேண்டும் என்று இக் குறள் கூறாமற் கூறுவதாகத் தோன்றுகிறது.
‘நட்பு’ என்ற தலைப்பிலும் கூறப்பட்டிராத இந்த உயர்ந்த கருத்தை ‘நிலையாமை’ என்ற தலைப்பில் வைத்துக் கூறியிருப்பதைக் காணும்பொழுது, இது நட்பை விளக்க வந்ததா? நிலையாமையை விளக்க வந்ததா? என்ற ஐயம் தோன்றுகிறது. எனினும், இவ்விரண்டையுமே விளக்க வந்தது என்று கொள்வது தவறாகாது.
“உடலைத் தனித்துவிட்டு உயிர் ஓடிப் போய்விடும்” என்று மட்டும் கூறினாற் போதாது என எண்ணி, வள்ளுவர் அதற்கொரு உவமையும் தேடிப்பிடித்து இக் குறளிற் புகுத்தியுள்ளார். அது “குடம்பை தனித்து ஒழிய, பறவை பறந்து போவதுபோல” என்பதே.
“குடம்பை” என்ற சொல்லுக்குக் கூண்டு என்றும் முட்டை என்றும் பொருள் கூறலாம். இவற்றில் வள்ளுவர் எடுத்துக் காட்டியது கூண்டையா? முட்டையையா? என்று இக்குறள் நமக்கு ஒரு ஐயப்பாட்டை உண்டாக்குகிறது.
‘ஒழிய’ என்ற ஒரு சொல் இக்குறளிலிருந்து அழிவைக் குறிப்பிடுவதால், பறவை வெளிப்பட்டதும் கூண்டு அழியாமையாலும், முட்டை அழிந்துபடுவதாலும் ‘குடம்பை’ என்பது முட்டையையே குறிக்கும் எனக் கருத இடம் ஏற்படுகிறது.
‘புட்பறந்தற்றே’ என்ற சொற்றொடரை நோக்கும் போது, முட்டையை விட்டு வெளிவந்த எதுவும் உடனே பறப்பதில்லை; ஆதலின், கூண்டு என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.
கூண்டை விட்டுப் பறந்த பறவை மீண்டும் கூண்டுக்குள் வந்து புகுவதாலும், கூண்டு பறவையோடு உடன் பிறந்த தல்ல ஆதலாலும், உடலை விட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் அவ் உடலில் வந்து புகாமைபோல, முட்டையை விட்டு வெளிவந்த எதுவும், மீண்டும் முட்டைக்குள் சென்று புகுவதில்லை ஆதலாலும், முட்டை என்று பொருள் கொள்வதே நலம் எனத் தோற்றுகிறது.
முட்டையைவிட்டு வெளிவரும் எதுவும் ‘குஞ்சு’ என்றே பெயர் பெறுவதாலும், கூண்டைவிட்டுப் பறந்து செல்வதே புள் எனப்படும் ஆதலாலும், இக்குறளில் உள்ள ‘குடம்பை’ என்ற சொல் கூண்டையே குறிக்கும் எனக் கூறவேண்டியிருக்கிறது.
கூண்டா? முட்டையா? என்ற ஐயப்பாட்டில் மேலும் இறங்காமல், குடம்பை என்ற சொல்லுக்கு “கூடு” என்று பொருள் கூறுவதே நலமாக விருக்கும். எவ்விதமெனில், அது பறவையின் கூட்டிற்கும், முட்டையின் கூடுக்கும், மக்களின் உடலுக்கும் ஏற்ற ஒரு சொல் என்பதனாலேயாம்.
என்றோ ஒரு நாளில், எப்போதோ ஒரு பொழுதில் கூடு விட்டுப் புள் வெளிப்பட்டு விடுதல்போல, உடலைவிட்டு உயிர் ஓடிப் போய்விடும் என்று எச்சரிக்கை செய்கிறது இக் குறள்.
ஒன்றாகத் தோன்றி, ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக மகிழ்ந்து, ஒன்றாக வருந்தி, ஒன்றாக அழிகின்ற உடலுயிரின் இத்தகைய உயர்ந்த நட்பே நிலைத்து நில்லாது என்றால், வேறு எவருடைய நட்பு நிலைத்திருக்கப் போகிறது? என்று இக் குறள் நம்மை எண்ணிப் பார்க்கும்படி தூண்டிக் கொண்டிருக்கிறது.
உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் விளக்கும் முறையும் அவர் கையாண்ட உவமையும் மிகமிக உயர்வானதாகும். இதுபோன்றதொரு கருத்தை உலகின் எப்பகுதியிலும், எம்மொழியிலும், எப்புலவனும் இன்றைக்கும் கூறவில்லை என்பதை எண்ணும்பொழுது தமது உள்ளம் பெருமகிழ்ச்சியடைகிறது.
தம்பி! நீ ஒன்று அல்ல; மூன்று உடல் ஒன்று, உயிரி இரண்டு; நீ மூன்று. பறவை ஒன்று, கூடு இரண்டு; பார்க்கின்ற நீ மூன்று. உடலும் உயிரும் உள்ளவரையில்தான் நீயும் இருப்பாய்; அவை இரண்டும் உனக்குக் கட்டுப்பட்டது மல்ல; அதன் நட்பும் நீடித்ததல்ல. ஆதலின் உனது நிலையும் நீடித்ததல்ல. ஆகவே, அதற்குள் நீ நல்லதை எண்ணு! நல்லதைச் சொல்! நல்லதைச் செய்! இவைகளைச் செய்ய உன்னால் இயலாது என்று தோன்றினால், தீமையையேனும் எண்ணாதே! சொல்லாதே! செய்யாதே! இது உன்னால் முடியும்! முடியக்கூடிய எதையும் உடனே செய்! காலந்தாழ்த்தாதே! ஏனெனில்,
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
குறளை எடு! படி! எண்ணு! உணர்! செய்! அது உன் நல்வாழ்வுக்கு ஏற்ற வழியைக் காட்டும் ஒரு கைகாட்டி!
வளரட்டும் தமிழர் நெறி!
8. அகர முதல எழுத்தெல்லாம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு
என்பது திருக்குறளில் முதற் குறள்.
தமிழ் எழுத்துக்கள் யாவும் அ' என்ற எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பதுபோல, இவ்வுலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டிருக்கிறது என்பது இதன் பொருள்.
எழுத்துக்களை அறிபவர்கள் முதலில் அகரத்தை அறிவதுபோல, இவ்வுலகத்தை அறிபவர்கள் முதலில் இறைவனை அறியவேண்டும் என்பது இதன் கருத்து.
உயிரெழுத்து 12. மெய்யெழுத்து 18. உயிர்மெய்யெழுத்து 216. ஆய்த எழுத்து 1. ஆக எழுத்துக்கள் 247-க்கும், ‘அ’ எழுத்து தலைமை தாங்குவதுபோல, மண், நீர், காற்று, தீ, வெளி ஆகிய ஐம்பெரும் பொருள்களைக் கொண்ட இவ்வுலகுக்கு இறைவன் தலைமை தாங்குகிறான் என்பது இதன் மறைபொருள்!
“அகர முதல எழுத்தெல்லாம்” என்பது தமிழ் எழுத்துக்களை மட்டும் குறிப்பதல்ல. மலையாள எழுத்திலும் முதல் எழுத்து ‘அ’. கன்னடத்திலும் முதல் எழுத்து ‘அ’, தெலுங்கிலும் முதல் எழுத்து ‘அ’ , இலத்தீன், கிரீக், ஆங்கிலம், பிரஞ்சு முதலிய மேல் நாட்டு மொழிகளிலும் முதல் எழுத்து ‘அ’ உருதுவிலும் முதல் எழுத்து ‘அ’. சம்ஸ்கிருதத்திலும் முதல் எழுத்து ‘அ’ நேற்று முளைத்து நடமாட வந்திருக்கும் இந்தியிலும் முதல் எழுத்து ‘அ’. ஆகவே, “அகர முதல எழுத்தெல்லாம்” என்பதற்கு, ‘தமிழ் எழுத்தெல்லாம்’ என்று பொருள் கொள்ளாமல், எழுத்து என்று எழுதப் பெறுகிற எழுத்தெல்லாம் என்று பொருள் காண்பதே சிறப்பாகும்.
பல மொழிகளைக் கொண்ட எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. அதுபோல் பல்வேறு உயிர்களைக்கொண்ட இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது என்பது இதன் விளக்கமாகும்.
தோன்றிய, தோன்றிக் கொண்டிருக்கிற, இனித் தோன்றவிருக்கிற எழுத்துக்கள் எல்லாம் 'அ' எழுத்தையே முதலாக உடையன என்று, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பெருமான் ஆராய்ந்து கூறியிருப்பது வியப்பிற்குரியதாகும்.
எழுத்துக்கள் மட்டுமின்றி சொற்களும்கூட அகரத்தையே முதலாக உடையனவாம். மக்கள் முதன்முதலில் வாயைத் திறந்தபோதே 'அ' ஒலித்துவிட்டது. பின் திறந்த வாயை மெல்ல மூடித் திறந்தால் "அம்மா" என்றும், அழுத்தமாக மூடித்திறந்தால் "அப்பா" என்றும் ஒலிக்கிறது. மக்கள் இவ்வுலகில் முதன்முதலிற் கண்ட தாய் தந்தையர்க்கு முதன் முதலில் ஒலிக்கிற சொற்களையே பெயராக வைத்திருப்பதும், அதிலும் மெல்லோசையை மென்மையையுடைய தாய்க்கும், வல்லோசையை வன்மையையுடைய தந்தைக்கும் வைத்து அழைப்பதும், ஆடு மாடுகளுங்கூட அலறும்பொழுது 'அம்மா' என்ற சொல்லே வெளி வருவதும், அச் சொல்லே எல்லாச் சொற்களுக்கும் முதன்மையாக அமைந்திருப்பதும் கருதத்தக்கன! தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகின் பலவிடங்களிலுமுள்ள பல மொழி பேசும் மக்களும் தங்களின் தாய் தந்தையரை 'அம்மா!' 'அப்பா!' என்றே அழைத்து வருவதையும், அதிலும் 'அ' எழுத்தே முதலில் அமைந்திருப்பதையும் காணும் பொழுது அகர முதல சொல்லெல்லாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
வடிவிலும்கூட அகரம் முன்நிற்கிறது. 'சர்வம் பிரணவ மயம் ஜகத்' என்று வேதாந்தங்களின் கருத்து. பிரணவம் என்பது ஓங்காரம் என வடநூலார் கூறுவர். தமிழிலோ வடமொழியிலோ, ஓங்காரம் முதல் எழுத்தாக இல்லை . உற்று நோக்கினால் 'அ' என்ற முதல் எழுத்தே ஓங்கார வடிவமாகத் தோன்றும்,
‘அ’ எழுத்தை முக்காற் பங்கு எழுதுங்கள். இன்னும் எழுதவேண்டிய காற்பங்கு போன்று மீதியாக இருக்கும் அதை அப்படியே செங்குத்தாக மேல் நோக்கிப் போட்டு விடுங்கள். அவ்வளவுதான். ஓங்கார வடிவைத் தலை கீழாகக் காண்பீர்கள். அதைக் காணும்பொழுது அகரமுதல வடிவெல்லாம் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
வடிவு மட்டுமல்ல; ஒலியுங்கூட அவ்விதமே. பிரணவத்தின் ஒலி ‘ஓம்’ என்பது. இதை ஒலிப்பதனால் ‘அ’ என்று வாயைத் திறந்து, ‘உ’ என்று குவித்து, ‘ம்’ என்று மூடியாக வேண்டும். இதிலிருந்து ‘ஓம்’ என்பதை ஒலிக்க, அ, உ, ம், என்ற மூன்று எழுத்துக்களும் அவற்றின் ஒலிகளும் தேவை என்பது தெளிவாகும். அதை அறிந்தே சிவவாக்கியர் என்ற சித்தர் ஒருவர்-
அகார காரணத்துளே அடங்கி நின்ற வையகம்
உகார காரணத்துளே ஒடுங்கி நின்ற வையகம்
மகார காரணத்துளே மயங்கி நின்ற வையகம்
என்று கூறினர் போலும். ‘ஓம்’ என்பதை ஒலிக்கும் இந்த அ, உ, ம் என்ற எழுத்துக்கள் மூன்றையும், ‘அ’ தன்னுள் அடக்கி நிற்பதைக் காணலாம், காணுங்கள்!
‘அ’ எழுத்தைச் சரிபாதியாக வெட்டுங்கள். மேற்பாதி வ ஆகவும், கீழ்ப்பாதி அதாவது ம தலைகீழாகவும் காணப்படும். மேல்பாதி வ-வை வலது கோடியில் வெட்டினால் உ என்றும் 1 என்றும் காணப்படும். இம்மூன்றும் அ, உ, ம என்றாகி ‘ஓம்’ என்ற ஒலியை ஒலிப்பதைக் கண்டு மகிழுங்கள். இதைக் காணும்பொழுது அகர முதல ஒலி எல்லாம் என்று கருத வேண்டியிருக்கிறது.
குறளில் உள்ள ‘எல்லாம்’ என்ற ஒரு சொல் ‘எழுத்தெல்லாம்’ என்பதில் எழுத்துடன் சேர்ந்தும், பிறகு தனித்தும் நின்று, சொல்லெல்லாம், வடிவெல்லாம், ஒலியெல்லாம் என்பவைகளையும் தன்னுள் அடக்கி, எல்லாம் என்று நிற்பதைக் காணும்பொழுது நமது உள்ளமெல்லாம் மகிழ்கிறது.
ஆதி பகவனையும் அகரம் விட்டுவிடவில்லை, அவனைப் பருப்பொருளாகவும், நுண்பொருளாகவும் காட்டுகிற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அகரத்தின் 1, உ, ம என்ற மூன்று துண்டுகளும் கடவுள், உயிர், மாயை என்றாகின்றன. ம, மாயையின் முதல் எழுத்து. உ, உயிரின் முதல் எழுத்து. 1 தனிக்கோடு இறைவனது அரு உரு. இது அகரம் காட்டுகின்ற ஆதிபகவனின் பருப்பொருளாம். அடுத்து நுண் பொருள்!
எழுத்துக்கள் எல்லாவற்றிலும் ‘அ’ நுண்ணியதாகக் கலந்தே உள்ளது, க் + அ, = க,ப்+அ =ப,ம்+அ+இ,= மி, த்+அ+உ.=து. ‘அ’ கலவாத எழுத்தே இல்லை. ஒலியும் அப்படியே. எதை ஒலிக்க வாயைத் திறந்தாலும் ‘அ’ எவ்வளவு நுண்பொருளாக மறைந்திருக்கிறதோ, அவ்வளவு நுண்பொருளாக ஆதிபகவனும் இவ்வுலகில் மறைந்து காணப்படுகிறான் என்பது வள்ளுவரது முடிவு!
அ, உ, ம என்ற மூன்றையும் கடவுள், உயிர், மாயை எனக் கண்டோம். சித்தாந்திகள் இதனைப் பதி, பசு, பாசம் என்பர். இவற்றின் நிலைமையை அகரம் அப்படியே காட்டுகிறது. உற்று நோக்கினால் குறளில் உள்ள உலகையே அகரத்துள் காணலாம். காணுங்கள்! முதலில் மூன்று துண்டுகளையும் ஒன்று சேர்த்து அகரமாக்கி உற்று நோக்குங்கள்.
“தனிக் கோடாகிய இறைவன், உயிர் தன்னை வந்து அடையட்டும்” எனக் கருணை காட்டி உயிர் முன் வந்து நிற்கிறான்.
‘உ’ என்ற உயிர் இறைவனை அடையத் துடியாய்த் துடித்து அவன் பக்கம் நீண்டு செல்லுகிறது,
‘ம’ என்ற மாயையானது உயிரை முழுதும் பற்றிக் கொண்டு, இறைவனையடையவிடாமல் தடுத்து, தலை கீழாகத் தொங்கி ‘எ’ இவ்வுலகுக்கு இழுக்கிறது.
'உயிரானது மாயையையும் விட முடியாமல், இறைவனையும் அடையமுடியாமல் இடையில் துன்புற்று வருந்திக்கொண்டிருக்கிறது! என்பது, அகரத்துள்ளே அடங்கி நிற்கின்ற இவ்வுலக நிகழ்ச்சி!
உலகம் இறைவனை முதலாக உடையது என்று கூறியதிலிருந்தே, உயிரை இரண்டாவதாகவும், மாயையை மூன்றாவதாகவும் உடையது என்பது தானாகவே தோன்றும். இம் மூன்றும் முப்பொருள் உண்மை எனப்படும். இதனை அகரம் தன்னுட் கொண்டு ஒளி வீசுகிறது.
‘அ’ முன்னும் ‘உலகு’ பின்னும் உள்ள இக் குறளை இன்னும் ஒருமுறை படியுங்கள். அதன் புதைபொருள் களனைத்தும் நன்கு விளங்கும்.
அகர முதல எழுத்து எல்லா (வற்றிற்கும்) ஆதி
பகவன் முதற்றே உலகு!
9. அப் பற்றைப் பற்றுக!
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்பது திருக்குறளில் ஒரு குறள்.
இதுவரை இக்குறளுக்குப் பொருள் கூறவந்தவர்கள் அனைவரும், “இவ்வுலகப் பற்றை விடுவதற்கு இறைவனுடைய பற்றைப் பற்றுக” என்றே கூறியிருக்கிறார்கள். இது பொருந்தவில்லை. இவ்வுரை உண்மையாகுமானால், குறள் அடியிற் கண்டவாறு இருப்பதே போதுமானது. அது,
பற்றுக பற்றற்றான் பற்றினை பற்று விடற்கு
என்பதே. குறளில் “அப்பற்றைப் பற்றுக” என்று மேலும் இரு பற்றுகள் காணப்படுகின்றன. அவற்றின் பொருள் யாது? என சிந்தனை செய்தாகவேண்டும்:
“பற்றுக பற்றற்றான் பற்றினை” என்று கூறிவிட்டு, மறுபடியும் அதையே திருப்பி அப் பற்றைப் பற்றுக" என்று வள்ளுவர் கூறியிருக்கிறார் எனப் பொருள்காண்பது வள்ளுவருக்குப் பெருமை தராது. ‘அது கூறியது கூறல்’ என்ற குற்றத்தின் பாற்படும். குறளில் அவ்விதம் காண்பதாகக் கூறுவது உண்மையைக் காண விரும்பாதவர்களின் கூற்றாக இருக்குமே தவிர உண்மையாக இராது.
பரிமேலழகரும் அவரைத் தழுவிய பிறரும் எடுத்த எடுப்பிலேயே செய்த தவறெல்லாம், ‘பற்றற்றான்’ என்பதற்கு ‘இறைவன்’ என்று பொருள் கண்டதேயாகும். அதன் பொருள் ‘இறைவன்’ அல்ல; ‘துறவி’ என்பதே.
“இவ்வுலகப் பற்றைத் துறந்த துறவியை முதலிற் பற்று; பிறகு அவன் பற்றியிருக்கிற இறைபற்றைப் பற்று; அப்போது இவ்வுலகப்பற்று எளிதில் விடும்” என்பது இக் குறளிற் புதைந்து கிடக்கும் பொருளாகும். இப்பொருள் தான் சரி என்பதற்கு நமக்குக் கிடைத்த புறச்சான்று ஒன்று உண்டு. அது சைவ சமய நூற்களும், பிற சமய நூல்களும் ஞானாசிரியனைப் பற்றியே இறைவனைப் பற்றவேண்டும் எனக்கூறி இருப்பதேயாம்.
கிடைத்த அகச்சான்றுகளும் இரண்டுண்டு. 1. இக்குறள் கடவுள் வாழ்த்தில் கூறப்பெற்ற ஒன்றல்ல. ஆகவே “பற்றற்றான்” என்பதற்கு ‘இறைவன்’ என்ற பொருள் பொருந்தாது. 2. இக்குறள் ‘துறவு’ என்ற தலைப்பிலேயே கூறப் பெற்றுள்ளது. ஆகவே பற்றற்றான் என்பது துறவியையே குறிக்கும்.
‘துறவு’ என்ற தலைப்பில், இதனுடன் உள்ள மற்ற ஒன்பது குறள்களும் துறவியைப் பற்றியே கூறியிருக்கும் பொழுது, இக் குறளை மட்டும் கடவுளைப்பற்றிக் கூறியிருப்பதாக எண்ணிய எண்ணமே தவறான பொருளைக் காண்பதற்கும், ‘அப்பற்றைப் பற்றுக’ என்பதற்குப் பொருள் கூற முடியாமற் போனதற்கும் காரணமாயிற்று.
ஆகவே, "பற்றற்ற துறவியைப் பற்று, பின் அவன் பற்றியிருக்கும் இறைபற்றைப் பற்று. அப்போது உலகப்பற்று எளிதில் விடும்" என்ற பொருளே இதன் உண்மையான பொருள் எனக் கொள்ளலாம்.
குறளை மறுபடியும் படியுங்கள். இப்போது அதன் உண்மைப் பொருள் நன்கு விளங்கும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
10. உடுக்கை இழந்தவன்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்பது ஒரு குறள். இதன் பொருள் :
ஆடை நழுவியபோது மனிதன் தன் கைகளுக்கு விண்ணப்பம் செய்துகொள்வதில்லை. அவன் கேளாமலேயே அவனது கைகள் விரைந்து சென்று நழுவிய ஆடையைப் பிடித்து இடையிற் கட்டிவிடுகின்றன. அதுபோல, நண்பனுக்கு இடையூறு ஏற்பட்டபொழுது, அவன் கேளாமலேயே வலியச் சென்று, அவனது இடரைப் போக்கி, உதவி செய்ய வேண்டும் என்பதாம்.
பரிமேலழகரும் பிறரும் இவ்வாறே பொருள் கண்டிருக்கிறார்கள். கருத்திற் பெரும் பிழை இல்லை. எனினும் பொருளிற் பெரும் பிழை காணப்படுகிறது. "இழந்த" என்ற சொல்லிற்கு, "நழுவிய" என்று பொருள் கண்டவர் எவ்வளவு பெரியவராயினும், அவர் தவறு செய்தவரே யாவர். உண்மையில் "இழந்த" என்பதற்குப் "பறி கொடுத்த" என்பதே பொருள். இழவு, இழப்பு, இழத்தல் என்பனவும் இப்பொருளையே குறிப்பனவாம்.
"ஆடையைப் பறிகொடுத்தவனுடைய கை அவன் கேளாமலேயே விரைந்து சென்று மூடிமறைத்து மானங்காப்பது போல, நண்பனது துன்பங்களையும் அவன் கேட்கும் முன்னே விரைந்து சென்று போக்குவதே சிறப்பு" என்பதே இக்குறளின் உண்மையான பொருளாகும்.
பரிமேலழகரின் பொருளை வைத்துக்கொண்டால், மூலத்தில் உள்ள ‘உடுக்கை இழந்த’ என்பதை, உடுக்கை இழிந்த என்று திருத்தியாக வேண்டும். மூலத்தை அப்படியே வைத்துக் கொண்டால், பொருளை ‘நழுவிய’ என்பதற்கு மாறாகப் ‘பறிகொடுத்த’ என்று திருத்தியாக வேண்டும்.
‘இழந்த’ என்று மூலத்தில் இருக்கும்பொழுது அதற்கு ‘நழுவிய’ என்று பொருள் காண்பதும், ‘இழந்த’ என்ற சொல்லிற்கும் ‘இழிந்த’ என்ற சொல்லிற்கும் உள்ள வேற்றுமையை வள்ளுவர் அறியார் என்று கருதுவதும் பெரும் பிழையாகும்.
‘நழுவிய’ என்பதைக் குறிப்பிட நேர்ந்தபொழுதெல்லாம், வள்ளுவர் அதனை இழிந்த என்ற சொல்வினைக் கொண்டே விளக்கி இருப்பதைக் கண்டு மகிழுங்கள். அது,
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை
என்பதாம்.
ஆகவே, இழந்த என்ற சொல்லிற்கு நழுவிய என்று பொருள் காணாமல் பறிகொடுத்த என்று பொருள் காண்பதே உண்மையானதாக இருக்கும்.
11. தினற்பொருட்டாற் கொல்லாது!
தினற்பொருட்டாற் கொல்லாது உலகுனனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்
என்பது ஒரு குறள். இதன் பொருள்—
தின்பது காரணமாக உலக மக்கள் கொல்லவில்லையானால் பொருள் காரணமாக ஊனை விற்பவர் எவரும் இல்லை என்பது பரிமேலழகரின் கருத்து. மகாவித்துவான் மு. அருணாசலக் கவிராயர் அவர்களும், பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும், பிறரும் தாங்கள் பதிப்பித்த பதிப்புகளில் இவ்வுரையை அப்படியே பொழிப் புரையாக்கிப் பதிப்பித்திருக்கிறார்கள்.
மூலத்திற்கும் உரைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதைத் தயவுசெய்து அமைதியாக இருந்து எண்ணிப் பார்ப்பது நல்லது.
தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லாதிருந்தால் என்று மூலத்தில் இருக்கும்போது, பரிமேலழகரும் பிறரும் தின்பதற்காக உலக மக்கள் வாங்காதிருந்தால் என்று கருதும்படி உரை எழுதுவானேன் என்பது நமது ஐயப்பாடு.
குறளுக்கு உள்ள சரியான உரை இது:-தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லுவதில்லையானால், விலை பெற்று ஊன் தருபவர் எவரும் இருக்கமாட்டார்கள்" என்பதே.
இவ்வுரை சரியானதே எனினும், கருத்தில் பெரும் பிழை காணப்படுகிறது. அதாவது, தின்பதற்காகக் கொல்லு கிற எவனும் வேறு எவனுக்கும் விலை கொடுக்க வேண்டியிராது. அவனே கொன்று தின்பான். கொன்று தின்பவனிடம் சும்மாவிருப்பவன் விலை கேட்கமுடியாது. கொடுப்பதற்கும் அவனிடம் ஊனும் இராது. ஆகவே இவ்வுரையும், குறளும் பெருங் குழப்பத்தை விளைவிக்கின்றன. ஆகவே ‘உண்மை எது?’ என ஆராய வேண்டியிருக்கிறது.
முதன் முதலில் ஏடு எழுதியவரோ, அச்சுக் கோர்த்த வரோ, பதிப்பித்தவரோ செய்த சிறு பிழையே இக் குழப்பத்திற்கெல்லாம் காரணமாயிற்று. ‘கொல்லா’ என்பது தவறு. ‘கொள்ளா’ என்பதே சரியான பாடம் ஆகும். இப்போது கொல்லா என்பதைக் கொள்ளா எனத் திருத்தி மூலத்தைப் படித்துப் பாருங்கள். இக் குழப்பங்கள் அனைத்தும் ஒழிந்து வெளிப்படையாகப் பொருளைக் காண்பீர்கள்.
தின்பதற்காக வாங்குபவர்கள் இல்லையானால் பொருளுக்காக கொன்று விற்பவர் எவரும் இரார் என்பதே வள்ளுவரின் குறளும், அவரது கருத்துமாகும். “கொல்வது தான் பாவம், கொன்றதைத் தின்பது பாவமில்லை” என் பாரது கூற்றை வள்ளுவர் இக்குறளின் மூலம் மறுத்திருப்பதைக் கண்டும் மகிழுங்கள்.
தினற்பொருட்டாற் கொள்ளாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்
12. செயற்கரிய செய்வார் பெரியர்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
என்பது ஒரு குறள்.
பெரியவர்கள் பிறரால் செய்தற்கு அரிய காரியங்களைச் செய்வார்கள்; சிறியவர்கள் அத்தகைய அரிய காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்பது இதன் பொருளாம்.
இதுவரை எல்லோராலும் இவ்வாறே பொருள் கூறப் பெற்று வந்துள்ளது. அவ்விதமாயின் இது மிகைபடக் கூறியதாக முடியும்.
‘செய்வதற்கு அருமையான காரியங்களைச் செய்பவர்களே பெரியவர்கள்’ என்று கூறிவிட்டபொழுதே, சிறியவர்கள் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் என்று தோன்றுகிறது. மறுபடியும் “சிறியர் செயற்கரிய செய்யார்” என்று கூறியிருக்க வேண்டியதில்லை அல்லவா?
வள்ளுவர் அதனை மறுபடியும் வற்புறுத்திக் கூறவே அவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுவதும், கூறுவதும் வள்ளுவருக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. ஆகவே, அதன் உண்மைப் பொருளை அறியவேண்டியிருக்கிறது.
ஏடு எடுத்து எழுதியவர்களின் அவசரப் புத்தியும், கறையான்களின் வயிற்றுப்பசியும் ஒன்றாய்க் கலந்து தமிழ்ச் கவடிகளில் பல பிழைகளை உண்டாக்கியிருக்கின்றன. அவற்றுள் ஒன்றே இதுவும் எனலாம்.
இக் குறளில் “கு” என்ற எழுத்தை “க” என்று அச்சிட்டதே உண்மையை உணரவெட்டாமல் செய்து விட்டது.
ஈற்றடியில் உள்ள க-வை “கு” என்று திருத்தினால் சரியாகக் காணப்படும். அப்போது—
“பெரியவர்கள் பிறரால் செய்தற்கு முடியாத அரும் பெருங்காரியங்களைச் செய்வார்கள். ஆனால், சிறியவர்களோ எளிதிற் செய்யக்கூடிய சிறிய காரியங்களைக்கூடச் செய்யமாட்டார்கள்” என்பதாகும்.
“கு” என்ற எழுத்து உடைந்து “க” வாகத்தோன்றியதன் விளைவே மேலே கண்ட பிழைக்குக் காரணமாயிற்று.
இதுவரை பதிப்பித்த குறள்களை அடுத்த பதிப்பாகப் பதிப்பிக்கும் பொழுது, தமிழகப் பேரறிஞர்கள் ஒப்பினால், இப்பிழைகளைத் திருத்தலாம். திருக்குறளைப் படிக்கும் பொழுது கருத்துான்றிப் படித்தால் அதன் புதை பொருள்களை எளிதில் அறியலாம்!
செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்குரிய செய்கலா தார்.
வாழ்க தமிழகம்!
வளர்க குறள் நெறி!